இந்தாண்டு கோப்பை சிஎஸ்கேவுக்கு தான் - கெவின் பீட்டர்சன்
கரோனா தொற்றால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நாளை மறுநாள் முதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் நாளை மறுநாள் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், சென்னை - மும்பை போட்டி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், "ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ் அணி நன்றாக விளையாட வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அந்த அணி எப்போதும் தொடரின் தொடக்கத்தில் தடுமாறி, பிறகு மீண்டு வந்து சிறப்பாக விளையாடும்.
இதுதான் கடந்தகால வரலாறு. ஆனால், நாம் இப்போது தொடரில் பாதியை கடந்துவிட்டோம். மும்பைக்கு இன்னும் 6 போட்டிகளே மீதமுள்ளன. எப்போதும் தொடரின் தொடக்கத்தில் தடுமாறும் மும்பை, இப்போதும் அதே போன்று தடுமாறினால், கம்பேக் கொடுப்பதற்கு போதுமான போட்டிகள் இல்லை. நீங்கள் 3 போட்டிகளில் தோற்றாலே கதை முடிந்துவிடும்.
மும்பை அணி கோப்பையை வெல்ல வேண்டுமெனில், சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் பந்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த வேண்டும். பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், தொடரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். எனினும், மும்பை மீண்டும் கோப்பை வெல்லும் அளவுக்கு திறன் கொண்டுள்ளது.
அதேசமயம், கடந்த சீசனில் மோசமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை மீண்டும் தடுமாறும் என்று அனைவரும் கணித்தார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் சிஎஸ்கே மிக சிறப்பாக விளையாடியது. அவர்களின் வெளிநாட்டு வீரர்கள் ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி மற்றும் சாம் கரன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
எனினும், இந்த நான்கு மாத இடைவெளி காரணமாக, சிஎஸ்கே அணியின் சீனியர் வீரர்கள் மீண்டும் அதே ஃபார்மை வெளிப்படுத்துவார்களா என்று தெரியவில்லை. அப்படி வெளிப்படுத்தினால், இந்த முறை ஐபிஎல் கோப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் என்று கூறுவேன். மற்ற அணிகள் அவர்களை சாதாரணமாக எடைபோட, சிஎஸ்கே சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறன்" என்று தெரிவித்துள்ளார்.