ஐபிஎல் 2021: நான்காவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஃபாஃப் டூ பிளெசிஸ், மொயீன் அலி, உத்தப்பா, கெய்க்வாட் என களமிறங்கிய அனைவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஃபாஃப் டூ பிளெசிஸ் 86 ரன்களையும், மொயின் அலி 37 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கைத் துரத்திய கேகேஆர் அணிக்கு சுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார்.
இதையடுத்து 11ஆவது ஓவரை வீசிய ஷர்துல் தாக்கூர், ஃபார்மில் இருந்த வெங்கடேஷ் ஐயரை 51 ரன்னிலும், நிதீஷ் ராணாவை முதல் பந்திலேவும் வெளியேற்றி சென்னை அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
அதன்பின் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரைசதம் அடித்த கையோடு, ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன் இருவரும் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் அந்த அணி 33 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுபுறம் சென்னை அணியின் வெற்றியும் உறுதியானது. அதன்பின் களமிறங்கிய லோக்கி ஃபர்குசன், ஷிவம் மாவி இணை சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினர்.
இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால 165 ரன்களை மட்டுமே சேர்க்கமுடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.