ஐபிஎல் 2021: சமூக வலைதளங்களில் எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்; வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்!
ஐபிஎல் 14ஆவது சீசன் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, 20 ஓவர்களில் 138/7 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.
இப்போட்டியில் ஆர்சிபி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக டேன் கிறிஸ்டியன் பார்க்கப்படுகிறார். கேகேஆர் இலக்கை துரத்திக் கொண்டிருந்த போது, டேன் கிறிஸ்டியன் வீசிய 12ஆவது ஓவரில் சுனில் நரேன் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இது அந்த அணி வெற்றி பெறுவதற்கு திருப்புமுணையாக இருந்தது.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் கிறிஸ்டியன் மீது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை அள்ளி வீசி வருகின்றனர். இதில் எல்லை மீறிய சில ரசிகர்கள் டேனியல் கிறிஸ்டியனின் மனைவி இன்ஸ்டா கணிக்கிற்கு சென்று, அவர் குறித்து மிக மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து டேன் கிறிஸ்டியன் தனது இன்ஸ்டாகிரம் பதிவில், “இன்றிரவு எனக்கு ஒரு சிறந்த விளையாட்டு இல்லை, ஆனால் இது விளையாட்டு. இருப்பினும், தயவுசெய்து அவளை அதிலிருந்து விடுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் ரசிகர்களின் செயலுக்கு ஆர்சிபி அணியின் சீனியர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “ஆர்சிபி அணிக்கு இது சிறந்த சீசன். ஆனால் முக்கியமான நேரத்தில் கொஞ்சம் பின் தங்கி விட்டோம். ஆனால் இந்த சீசனில் நாங்கள் காட்டிய சிறப்பான ஆட்டத்தை யாரும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சமூக ஊடகங்களில் சிலர் மோசமாக நடந்துக்கொள்கின்றனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
நாம் அனைவரும் மனிதர்கள். ஒவ்வொரு நாளும் முடிந்த பங்களிப்பைச் செய்து வருகிறோம். சில ரசிகர்களோ வீரர்களை மிகவும் தவறான முறையில் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். கொச்சையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய நண்பர்கள், அணியினரை கொச்சையாக விமர்சித்தால், உடனே எனது இன்ஸ்டா, ட்விட்டர் பக்கம் மூலம் பிளாக் செய்யப்படுவீர்கள். கெட்ட செய்திகளை பரப்புவதற்குப் பதிலாக ஒழுக்கமான நல்ல மனிதர்களாக இருங்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.