ஐபிஎல் 2021: டி காக் அதிரடியில் வெற்றியை தனதாக்கியது மும்பை!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் 24 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 171 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களையும், ஜோஸ் பட்லர் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து 172 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மும்பை அணிக்கு கேப்டன் ரோகித், டி காக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் 17 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா, கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் 16 ரன்கள் எடுத்து மோரிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவர்களை தொடர்ந்து வந்த குர்ணால் பாண்டியா அதிரடியாக விளையாடி 39 ரன்களை குவித்து, முஸ்தபிசூர் ரஹ்மான் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக் விளையாடி வந்த டி காக் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் 18.3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இதன்மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது 3ஆவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்தது. இப்போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த குயின்டன் டி காக் 50 பந்துகளில் 70 ரன்களை சேர்த்தார்.