ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் ஹாட்ரிக்கில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கிளென் மேக்ஸ்வெல் 56 ரன்களையும், விராட் கோலி 51 ரன்களையும் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றி இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. பின் டி காக் 24 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். அதிலும் 17ஆவது ஓவரை வீசிய ஹர்சல் பட்டேல், ஹர்திக் பாண்டியா, கீரேன் பொல்லார்ட், ராகுல் சஹார் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தில் ஹாட்ரிக்கைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் மும்பை அணி 18.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆர்சிபி அணி தரப்பில் ஹர்சல் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும், கிளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.