ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை மட்டுமே சேர்த்தது. மும்பை அணி தரப்பில் நாதன் குல்டர் நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 22 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷான் அரைசதம் அடித்ததுடன் அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் 8.2 ஓவர்களிலேயே மும்பை அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசன் பிளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டது.