ஐபிஎல் 2021: ராணா, நரைனின் அதிரடியில் டெல்லியை பந்தாடியது கேகேஆர்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த், ஸ்டீவ் ஸ்மித் தலா 39 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் சுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் வெங்கடேஷ் ஐயர் 14 ரன்னிலும், ராகுல் திரிபாதி 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின் ஷுப்மன் கில்லும் 30 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ராணாவுடன் ஜோடி சேர்ந்த சுனில் நரைன் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதீஷ் ராணா 36 ரன்களை சேர்த்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் 5ஆவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தைத் தக்கவைத்து பிளே ஆஃப் சுற்றுக்கான பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.