ஐபிஎல் 2021: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி; அபராதம் விதிக்க வாய்ப்பு!

Updated: Tue, Oct 12 2021 13:20 IST
Image Source: Google

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி கொல்கத்தா அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் இருந்து வெளியேறியது. 

இதன் காரணமாக அடுத்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது விளையாடிய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நேற்றைய போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக களத்தில் இருந்த நடுவர் மூன்று தவறான முடிவுகளை வழங்கினார். இந்த முடிவுகளின் மூலம் பெங்களூர் அணிக்கு 2 ரன்கள் வீணாகின.

நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி பேட்டிங் செய்கையில் 16.3 ஆவது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்தில் சபாஷ் அகமது ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார். அப்போது சபாஷ் அகமது ஓரு ரன் ஓடிய நிலையில் அம்பயர் அவுட் கொடுத்தார். இருப்பினும் ரெவியூ மூலம் அது நாட்அவுட் என்று தெரிந்ததால் அந்த ஒரு ரன் செல்லாமல் போனது. அதேபோன்று 19.3 ஓவரில் ஹர்ஷல் பட்டேல்-க்கு அம்பயர் எல்.பி.டபிள்யூ மூலம் அவுட் கொடுத்தார்.

அதிலும் ரிவ்யூ மூலம் மீண்டும் நாட்அவுட் என வழங்கப்பட்டாலும் ஒரு ரன் மறுக்கப்பட்டது. இதன் காரணமாக பெங்களூர் அணி முதல் இன்னிங்சில் 2 ரன்களை தவறவிட்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்சின் போது சாஹல் வீசிய பந்தில் திரிபாதி எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் அம்பயர் நாட்அவுட் கொடுத்தார். மீண்டும் ஆர்.சி.பி அணி டி.ஆர்.எஸ் மூலம் விக்கெட்டினை பெற்றது. இந்நிலையில் இப்படி தொடர்ச்சியான அம்பயரின் தவறான முடிவால் கோலி அதிருப்தி அடைந்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் நேரடியாக மைதானத்தில் இருந்த அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே களத்தில் இருந்த மற்றொரு அம்பயர் கோலியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். என்ன தான் முடிவுகள் அனைத்தும் பெங்களூர் அணிக்கு எதிராக இருந்தாலும் களத்தில் இருக்கும் அம்பயருக்கு எதிராக கோலி இதேபோன்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது தவறு என்றும் அவருக்கு இதனால் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை