ஐபிஎல் 2021: மும்பையின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 84 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 82 ரன்களையும் சேர்த்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் கடின இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு ஜேசன் ராய் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஜேசன் ராய் 34 ரன்களில் ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனார்.
அடுத்து வந்த கேப்டன் மனீஷ் பாண்டே ஒரு முனையில் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மறுமுனையிலிருந்து மனீஷ் பாண்டே அரைசதம் கடந்தார். ஆனாலும் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றாலும் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை.