அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சி - தோனி!

Updated: Mon, Oct 11 2021 11:13 IST
Image Source: Google

துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 60 ரன்களையும், ரிஷப் பண்ட் 51 ரன்களையும் குவித்தனர். பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸின் விக்கெட்டை பறிகொடுத்தது.

அதன்பின்னர் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர். கெய்க்வாட் 73 ரன்களையும், ராபின் உத்தப்பா 63 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இறுதிகட்டத்தில் கடைசி ஓவரின் போது 13 ரன்கள் தேவைப்பட்டது அப்போது களத்தில் இருந்த தோனி தொடர்ச்சியாக 3 பவுண்டரி விளாசி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. 

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, “இந்த போட்டி இறுதி கட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. டெல்லி அணி வீரர்கள் இந்த மைதானத்தில் பெரிய பவுண்டரிகளை சிறப்பாக பயன்படுத்தினர்.

நான் விளையாடிய போது பந்தினை பார்த்து அடித்தால் மட்டுமே போதும் என்று நினைத்தேன். ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிவரவில்லை. எனவே இம்முறை நிச்சயம் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன். பயிற்சியின்போது பந்துகளை நன்றாக எதிர் கொண்டதால் இந்த போட்டியின் போது பந்துகளை பார்த்து அடித்தால் போதும் என்று மட்டுமே நான் நினைத்தேன், மற்றபடி என் மனதில் எதுவும் ஓடவில்லை.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இறுதியில் அணியின் வெற்றிக்கு நானும் பங்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ராபின் உத்தப்பா எப்பொழுதுமே முன்கூட்டி களமிறங்க விரும்புவார். இம்முறை அணியின் மூன்றாவது வீரராக அவர் சிறப்பாக விளையாடினார். தொடக்கத்திலேயே ஓப்பனர் வெளியேறியதால் உத்தப்பாவை அனுப்பினோம். அவரது மிகச் சிறப்பான இன்னிங்சை இந்த போட்டியில் அவர் வெளிப்படுத்தி விட்டார்” என தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை