ஐபிஎல் 2021 : சென்னை டூ யுஏஇ; அலர்ட் கொடுத்த சிஇஓ!
ஐபிஎல் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியம் உள்ளிட்ட வீரர்களுக்கு கரோனா உறுதியானதால் இத்தொடரின் எஞ்சிய 31 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மேலும், இந்தியாவில் கரோனா அதிகரித்துக் காணப்படுவதால், போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 31 போட்டிகளை 27 நாட்களில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இதனால், முதல் போட்டியே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபடலாம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் ஓய்வில்தான் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காத பல வீரர்கள் இருக்கிறார்கள். முதற்கட்டமாக, இவர்களை அமீரகம் அழைத்துச் செல்ல சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், “சிஎஸ்கே அணி ஆகஸ்ட் 13 அல்லது 14ஆம் தேதி அமீரகம் புறப்படும். இதில் சில வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். சர்வதேச வீரர்கள் பின் நாள்களில் அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் இக்குழுவில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னா போன்றவர்கள், ஃபாஃப் டூ பிளேசிஸ் ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.