சிஸ்கேவுக்கு இந்த விஷயம் தலைவலி தான் - சிஇஓ காசி விஸ்வநாதன்!
இந்தியாவில் நடைபெற்ற 14வது சீசன் ஐபிஎல் தொடரானது கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை இன்னும் முடியாத நிலையில் மீண்டும் இந்த ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் ஏற்பாடுகளில் தற்போது பிசிசிஐ மும்முரம் காட்டி வருகிறது. அதன்படி செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத சென்னை அணி இந்த ஆண்டு மீண்டும் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருக்கும் ஒரு சிக்கல் குறித்து தற்போது அந்த அணியின் தலைமை செயல் அலுவலர் காசி விஸ்வநாதன் ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய காசி விஸ்வநாதன், தற்போது இந்த ஆண்டு சிஎஸ்கே அணி வழக்கம்போல பலமாகவே இருக்கிறது. ஆனால் அணியில் இப்போதுள்ள பிரச்சினை யாதெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச விமானங்கள் வருவதற்கு ஜூலை 21ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் எங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
ஏனெனில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் விடுதிகளை முன்கூட்டியே புக்கிங் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தயாராக வேண்டும். இதற்கெல்லாம் தாமதம் ஏற்படுமாயின் விமான பயணமும், விடுதி அறை புக் செய்வதும் பெரிய பிரச்சினையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.