ஐபிஎல் 2021: கேகேஆரை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்!
நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ராகுல் ரிதிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 36 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 25 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் பட்லர் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.