ஐபிஎல் 2021: மீண்டும் ஒரு த்ரில்லர்; இம்முறை போட்டியை வென்றது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்தது.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஜெயதேவ் உனத்கட் தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசினார். அதனால் பிருத்வி ஷா 2 ரன்களிலும், ஷிகார் தவான் 9 ரன்களிலும், ராஹானே 8 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
அடுத்து இறங்கிய ஸ்டாய்னிஸ் ரன் ஏதும் எடுக்காமல் முஸ்தாபிஷூர் ரஹ்மான் பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, டெல்லி அணி 37 ரன்களில் 4 விக்கெட் எடுத்து தத்தளித்தது.
கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி, 30 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். இருப்பினும் அடுத்து அவர் சந்தித்த இரண்டாவது பந்திலேயே வீணாக ஓடி ரன்அவுட் ஆனார்.
அவர் வெளியேறிய பின், மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்காததால், டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, நேர்த்தியாக பந்துவீசினார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜோஸ் பட்லர், மனன் வோரா, கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன், அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மில்லரும் ஆட்டமிழக்க, போட்டி டெல்லி அணி பக்கம் திரும்பியது.
இருப்பினும் கடைசி இரண்டு ஓவர்களை எதிர்கொண்ட கிறிஸ் மோரிஸ் நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு ராஜஸ்தான் அணிக்கு த்ரில்லர் வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அணியை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது.