முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க நீல நிற ஜெர்ஸில் களமிறங்கும் ஆர்சிபி!

Updated: Tue, Sep 14 2021 15:02 IST
Image Source: Google

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புது முயற்சியை கையாளவுள்ளது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் இயற்கையையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரே ஒரு போட்டியில் பச்சை நிறத்தினாலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு போட்டியில் நீல நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி அமீரகத்தில் நடைபெறும் 14வது சீசன் ஐபிஎல் தொடரில், வரும் 20ஆம் தேதியன்று ஆர்சிபி அணி கேகேஆர் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி நீல நிற ஜெர்ஸியை பயன்படுத்தவுள்ளது.

போட்டி முடிந்த பிறகு ஒவ்வொரு வீரரும் அவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியில் கையெழுத்திட்டு அதனை ஏலத்திற்கு விடவுள்ளனர். அதன் மூலம் கிடைக்கு பணத்தை ஆக்சிஜன் வாங்குவதற்கு நிதியுதவியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஜெர்ஸியின் பின் புறத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளவும், பாதுகாப்பாக இருங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள காணொளியில் அணியின் கேப்டன் விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர்,“கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக இந்த தொகை கொடுக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், வாய்ப்பு இருப்பவர்கள் கரோனா தடுப்பூசியை உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்ற ஆர்சிபி அணி இந்த முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. தற்போது அணியில் சில மாற்றங்களையும் செய்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை