‘அஸ்வினை பயன்படுத்தாதது தவறுதான்’ -ரிக்கி பாண்டிங்

Updated: Fri, Apr 16 2021 13:46 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் 7ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 147/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் இலக்கை அடைந்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இருப்பினும், அவருக்கு நான்காவது ஓவர் வழங்கப்படவில்லை. மாறாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸிற்கு ஒரு ஓவர் வழங்கப்பட்டது. ஸ்டாய்னிஸ் சொதப்பலாக பந்துவீசியதால் அந்த ஒரு ஓவரில் 15 ரன்கள் வரை போனது. இது டெல்லி கேபிடல்ஸ் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஸ்டாய்னிஸிற்கு ஓவர் கொடுக்கப்படாமல், அஸ்வின் 4 ஓவர்கள் வீசியிருந்தால் டெல்லி அணி நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்,“அஸ்வினுக்கு நான்காவதாக ஒரு ஓவரை வழங்கியிருக்க வேண்டும். ரிஷப் பந்த், சக அணி வீரர்களுடன் அமர்ந்து பேசுகையில் இதுதொடர்பாக விரிவாகப் பேசுவேன். 3 ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு பவுண்டரியைக் கூட அஸ்வின் அடிக்கவிடவில்லை.
முதல் போட்டியில் அஸ்வின் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அடுத்து இரண்டாவது போட்டிக்காக கடுமையாகப் பயிற்சி செய்து, சிறப்பாகச் செயல்பட காத்திருந்தார். அவரை நாங்கள் முழுமையாக பயன்படுத்தவில்லை.

12ஆவது ஓவர் வரை ஆட்டம் டெல்லி அணிக்கு சாதகமாகத் தான் இருந்தது. அடுத்துப் பந்துவீசியவர்கள் சொதப்பியதால் ஆட்டம் எங்கள் கையை விட்டு போனது” எனத் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை