கரோனா அச்சுறுத்தல்: 7.5 கோடி நிதி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!
இந்தியாவில் கரோனா 2ஆவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும், அவரச உதவிக்கு முக்கியமான ஆக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் வழங்க உதவிக்கரம் நீட்டியுள்ளன.
கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வரும் இந்தியாவுக்கு ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் விளையாடி வரும் எட்டு அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கிறது. அந்த அணியின் வீரர்கள், பயிற்சியாளர், அணி நிர்வாகிகள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் என அனைவரும் இணைந்து இந்த நிதியில் பங்களிப்பு செய்துள்ளனர்.
அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை, பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டும் இதற்கு உதவியுள்ளது. இந்த நிதியை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உதவ உள்ளதாம். குறிப்பாக தற்போதைய நெருக்கடி சூழலை சமாளிக்கவும், ஆக்சிஜன் தேவையை சமாளிக்கவும் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் கம்மின்ஸ் முதன் முதலில் இந்தியாவுக்கு உதவ பிஎம் கேர்ஸ் நிதிக்கு நிதியுதவி அளித்திருந்தார். தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீயும் நிதி உதவி அளித்திருந்தார்.