ஐபிஎல் 2022: பரபரப்பான ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய 34-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு ஜாஸ்பட்லர், தேவ்தட் படிக்கல் இணை தொடக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை பிரிக்க முடியாமல் டெல்லி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர்.
இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து 155 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினர். இதனையடுத்து 35 பந்துகளில் 54 ரன்களை சேர்த்த தேவ்தட் படிக்கலை 16-வது ஓவரில் கலீல் அஹமது வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன் பட்லருடன் கைகோர்த்தார்.
இருவரும் இணைந்து டெல்லி பந்து வீச்சாளர்களின் பந்துகளை நாலாப்புறமும் சிதறடித்தனர். 65 பந்துகளில் 116 ரன்களை குவித்த பட்லர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீசிய 19-வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சர்ஃப்ராஸ் கான் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த பிரித்வி ஷா - கேப்டன் ரிஷப் பந்த் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 37 ரன்களில் பிரித்வி ஷாவும், 44 ரன்களில் ரிஷப் பந்த்தும் விக்கெட்டை இழந்தனர்.
அடுத்து களமிறங்கிய லலித் யாதவ் 37 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொதப்பினர். அதிலும் 19ஆவது ஓவரை வீசிய பிரஷித் கிருஷ்ணா, ஒரு விக்கெட்டை வீழ்தியதுடன், ஓவரை மெய்டனாகவும் மாற்றினார்.
அதன்பின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அதனை எதிர்கொண்ட ரோவ்மன் பாவல் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி எதிரணிக்கு பயத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதன்பின் அவரும் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் கனவும் சிதைந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.