ஐபிஎல் 2022: அஸ்வின் அரைசதம்; டெல்லிக்கு 161 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 58ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 19 ரன்கள் எடுத்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதனைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ் வீசிய 15ஆவது ஓவரின் முதல் பந்தை அடிக்க முயன்ற அஸ்வின், டேவிட் வார்னரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் தங்கள் பங்கிற்கு சில பவுண்டரிகளை அடித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 50 ரன்களை விளாசினார்.