ஐபிஎல் ஏல நடத்துநராகப் பிரபல வர்ணனையாளர் சாரு சர்மா தேர்வு!
ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் இன்றும் நாளையும் (பிப்ரவரி 12, 13) நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸ் என புதிதாக இரு அணிகள் இணைந்திருக்கும் நிலையில், 10 அணிகள் ஏலத்தில் இருக்கின்றன. அவை ஏலத்தில் எடுப்பதற்காக மொத்தமாக 590 வீரா்கள் களம் காண்கின்றனா்.
ஐபிஎல் ஏல நடத்துநராக இங்கிலாந்தைச் சேர்ந்த எட்மீட்ஸ் பணியாற்றுகிறார். ஐபிஎல் போட்டியின் ஆரம்பம் முதல் ரிச்சர்ட் மேட்லி, ஏல நடத்துநராகப் பணியாற்றினார். 2018 முதல் எட்மியட்ஸ் அப்பணியைத் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ஏலம் நடைபெற்றபோது ஏல நடத்துநர் எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார். வனிந்து ஹசரங்காவை அணிகள் தேர்வு செய்ய மும்முரமாக இருந்தபோது மேடையிலிருந்து எட்மியட்ஸ் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஐபிஎல் ஏலம் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. எட்மீட்ஸுக்குக் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்ததாக அறியப்படுகிறது.
இந்நிலையில் எட்மீட்ஸின் உடல்நிலை பற்றி பிசிசிஐ தரப்பு தெரிவித்ததாவது: ஏல நடத்துநரின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் அவரைக் கவனித்து வருகிறார்கள் எனக் கூறப்பட்ட்டுள்ளது.
இந்நிலையில் எட்மீட்ஸ் மீண்டும் ஏலத்தை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் சாரு சர்மா, ஏல நடத்துநராகத் தேர்வாகியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.