ஐபிஎல் 2022: மீண்டும் தள்ளிப்போகிறதா மெகா ஏலம்?
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை மெகா ஏலம், 2 புதிய அணிகள் என பல சுவாரஸ்யங்கள் உள்ளன. இதற்காக ஏற்கனவே ஒவ்வொரு அணியும், தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் வெளியிட்டது.
இதனால் அடுத்ததாக மெகா ஏலத்தை நடத்துவதற்கான பணிகள் மட்டும் தான் பாக்கியுள்ளது. முதலில் இந்த ஏலம் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படவிருப்பதாக இருந்தது. ஆனால் அகமதாபாத் அணியின் மீது இருந்த சூதாட்ட புகார் காரணமாக மெகா ஏலம் தள்ளிப்போனது. பின்னர் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு பிப்ரவரி மாதத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வீரர்களின் ஏலம் பிஃப்ரவரி மாதம் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் இதற்காக பெங்களூரு நகரத்தில் உள்ள ஹோட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. ஏலத்தில் பங்கேற்கவுள்ள வீரர்களின் முழு பட்டியலை விரைவில் வெளியிடப்படவிருந்தது.
இந்நிலையில் அதில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் மெகா ஏலத்தின் தேதிகள் மீண்டும் தள்ளிவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹோட்டல்களும் புக் செய்யப்படாமல் உள்ளன. நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த பெங்களூருவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகின்றன. எனவே அங்கு மெகா ஏலத்தை நடத்துவது ஆபத்தானது எனக்கருதியுள்ள பிசிசிஐ, வேறு இடத்திற்கு மாற்ற முடிவெடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் கரோனாவின் தாக்கம் பெரிதாக இருந்தால் மெகா ஏலத்தை மேலும் தள்ளிவைக்கும் முடிவில் பிசிசிஐ உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பேசியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், “கரோனா பிரச்சினைகள் கையை மீறி சென்றுவிட்டன. ஹோட்டல்களை புக் செய்வதில் பெரிய பிரச்சினை இல்லை. பொறுமையுடன் தான் எதையும் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. தேவைப்பட்டால் மாற்றங்கள் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.