ஐபிஎல் 2022: இளம் வீரரை வெகுவாக பாராட்டிய கேஎல் ராகுல்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் 7ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 50 ரன்களும், சிவம் துபே 49 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 19.3 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. லக்னோ அணியில் அதிகபட்சமாக டி காக் 61 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய லீவிஸ் 55 ரன்களும், இளம் வீரர் பதோனி 19 ரன்களும் எடுத்தனர்.
இந்தநிலையில், சென்னை அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய லக்னோ அணியின் கேப்டனான கே.எல் ராகுல், அந்த அணியின் இளம் வீரர்களான ரவி பிஸ்னோய் மற்றும் அயூஸ் பதோனியை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.
இது குறித்து கேஎல் ராகுல் பேசுகையில், “ரவி பிஸ்னோய் திறமையான வீரர். இந்த இளம் வயதிலேயே தனது கடின உழைப்பு மற்றும் போராட்டத்தின் மூலம் தான் இவ்வளவு பெரிய உயரங்களை அவரால் எட்ட முடிந்துள்ளது. ஈரமான பந்துகளில் கூட அவர் சிறப்பாக பந்துவீசுகிறார். அவரது முன்னேற்றம் எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.
அயுஸ் பதோனி எங்கள் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு கூடுதல் வலு சேர்க்கிறார். அவரது பேட்டிங் குறித்து சில வீடியோக்கள் பார்த்தேன், அவர் அடிக்கும் பல ஷாட்கள் தனித்துவம் மிக்கதாக உள்ளது. அயூஸ் பதோனியை இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்துள்ள பெரிய சொத்தாகவே நான் பார்கிறேன்” என்று தெரிவித்தார்.