ஐபிஎல் 2022: கம்பேக் கொடுக்கும் தீபக் சஹார்; ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் 131 ரன்கள் அடித்து தோற்ற நிலையில், 2வது போட்டியில் 210 ரன்கள் அடித்தும் தோற்றது.
இதற்கெல்லாம் காரணம் சென்னை அணியின் பந்துவீச்சாளர் பிரச்சினை தான். முன்னணி பந்துவீச்சாளரான தீபக் சஹார் காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டு பெங்களுரூ தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால், அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தீபக் சஹார் மீண்டும் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைப்பெற்று வந்த அவர், சமீபத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவர் மீது பிசியோதெரபிஸ்ட் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது அவர் ஓரளவிற்கு உடற்தகுதி பெற்றுவிட்டதாக தெரிகிறது.
இதே போன்று அவர் தொடர்ந்து செயல்பட்டால், இன்னும் 2 வாரங்களுக்குள் அவரை பெங்களூருவில் இருந்து மும்பைக்கு அனுப்பிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிசியோதெரபிஸ்டின் கணிப்பின் படி வரும் ஏப்ரல் 25ஆம் தேதி சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் மோதும் போட்டியில் பங்கேற்பார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு முன்னணி பந்துவீச்சாளர் இல்லாததால், வேறு வழியின்றி முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர்களை சிஎஸ்கே பயன்படுத்தி வருகிறது. இதே காரணத்திற்காக தான் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 19ஆவது ஓவரை ஷிவம் தூபேவுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது