NEP vs WI, 3rd T20I: நேபாள் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்!

Updated: Wed, Oct 01 2025 07:10 IST
Image Source: CricketNep X

Nepal vs West Indies, 3rd T20I: நேபாள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தாலும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேபாளத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நேபாள் அணி வெற்றி பெற்று அசத்தியதுடன், வரலாற்றில் முதல் முறையக வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரையும் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு குஷால் புர்டல் - குஷால் மல்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் குஷால் மல்லா 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் ரோஹித் பவுடல் 17 ரன்களிலும், குல்ஷன் ஜா 10 ரன்னிலும், சந்தீப் ஜோரா 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் குஷால் புர்டலும் 39 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலினுக்கு திரும்பிய நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சோபிக்க தவறினர். 

இறுதியில் நேபாள் அணி 19.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 122 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரோமன் சிம்மன்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜெடிய பிளேட்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அமிர் ஜங்கூ - அகீம் அகஸ்டே இணை தொடக்கம் கொடுத்தனர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்கவிட்டு ஸ்கோரை உயர்த்தினர். 

Also Read: LIVE Cricket Score

இதில் ஆபாரமாக விளையாடிய அமீர் ஜாங்கூ அரைசதம் கடந்தார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமீர் ஜாங்கூ 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 74 ரன்களையும், அகீல் அகஸ்டே 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 12.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நேபாள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை