ஐபிஎல் 2022: சில போட்டிகளை தவறவிடும் வார்னர்!
ஐபிஎல் 15ஆவது சீசன் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளின் வீரர்களும் மும்பையில் உள்ள பயோ பபுளுக்கு இணைந்து வருகின்றனர்.
வீரர்கள் அனைவரும் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வரும் 15ஆம் தேதி முதல் பயிற்சிகளை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மட்டும் 2 வாரத்திற்கும் மேல் தாமதாக ஐபிஎல் தொடரில் கலந்துக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை சரிகட்டவே அணிகள் ஆலோசனைகளை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் டெல்லி அணியில் எடுக்கப்பட்ட முக்கிய வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரின் முதல் 2 வாரத்திற்கு பங்கேற்க போவதில்லை எனக்கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இது வரும் 25ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் நேரடியாக ஐபிஎல் தொடருக்கு வருவதில் சிக்கல் இல்லை. எனினும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டேவிட் வார்னருக்கு சிறு வயது முதலே ஷேன் வார்னே தான் ஹீரோ. அவரை போன்று ஆக வேண்டும் என்பதற்காக தான் வார்னர் கிரிக்கெட்டிற்குள் வந்துள்ளார். சிறுவயதில் வீட்டின் சுவர்களின் வார்னேவின் புகைப்படங்களை தான் ஒட்டி வைத்திருப்பாராம். அப்படிபட்ட நாயகனின் இறுதிச்சடங்கு வரும் மார்ச் 30ஆம் தேதியன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனை கண்டிப்பாக கலந்துக்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
இறுதிச்சடங்கு 30ஆம் தேதி முடிந்தாலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 5ஆம் தேதி வரை எந்தவொரு வீரரையும் அயல்நாடு செல்ல அனுமதிக்கவில்லை. எனவே ஏப்ரல் 5ஆம் தேதி புறப்பட்டு இந்தியா வந்தாலும் 5 நாட்கள் குவாரண்டைன் இருந்த பின்னர், அணியுடன் இணைந்து விளையாட ஏப்ரல் 10ஆம் தேதி ஆகிவிடும். 5 - 6 போட்டிகளை தவறவிடுவார். இதனால் டெல்லி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.