ஐபிஎல் 2022: குல்தீப் சுழலில் சரிந்தது கேகேஆர்!

Updated: Sun, Apr 10 2022 19:34 IST
IPL 2022: Delhi Capitals defeat Kolkata Knight Riders by 44 runs (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் கேகேஆரும் டெல்லி கேப்பிட்டல்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா வழக்கம்போலவே தொடக்கம் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். வார்னரும் அடித்து ஆட, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பிரித்வி ஷா - டேவிட் வார்னரின் அதிரடியால் பவர்ப்ளேயில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை குவித்தது.

அடித்து ஆடிய பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடித்தார். 29 பந்தில் 51 ரன்கள் அடித்து பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் 14 பந்தில்27 ரன்கள் அடித்து சிறிய கேமியோ ரோல் ப்ளே செய்த ரிஷப் பண்ட்டும் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டேவிட் வார்னர், 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லலித் யாதவ்(1) மற்றும் ரோவ்மன் பவல் (8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர்.

ஆனால் ஷர்துல் தாகூர் கடைசி 2 ஓவர்களில் சிக்ஸர்களை விளாசி  சிறப்பாக முடித்து கொடுத்தார். உமேஷ் யாதவ் வீசிய 19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசிய உமேஷ் யாதவ், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். அக்ஸர் படேலும் அவர் பங்கிற்கு ஒரு சிக்ஸர் அடிக்க, 20 ஓவரில் 215 ரன்களை குவித்தது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் - அஜிங்கியா ரஹானே ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். பின் வெங்கடேஷ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹானே 8 ரன்களில் வெளியேறினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - நிதீஷ் ராணா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

பின்னர் ராணா 30 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார். அதன்பின் அடுத்த பந்திலேயே குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்து அவரும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் 16ஆவது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், யுமேஷ் யாதவ் என அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி டெல்லி அணியின் வெற்றியை ஏறத்தாழ உறுதிசெய்தார்.

இதனால் 19.4 ஓவர்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை