ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸை கட்டுப்படுத்திய மும்பை பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 69ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக தொடங்கினார். ஆனால் மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 5 ரன்களிலும், மிட்செல் மார்ஷ் ரன் ஏதுமின்றியும் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.
பின்னர் 24 ரன்களைச் சேர்த்திருந்த பிரித்வி ஷாவும் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய சர்ஃப்ராஸ் கானும் 10 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரிஷப் பந்த் - ரோவ்மன் பாவல் இணை விக்கெட் இழப்பை தடுத்தனர்.
இதில் ரோவ்மன் பாவல் அதிரடியாக விளையாட, மறுமுனையில் ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தில் ஸ்கோர் செய்துவந்தார். பின்னர் அதிரடியாக விளையாட முயன்ற ரிஷப் பந்த் 39 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரமந்தீப் சிங்கிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோவ்மன் பாவல் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இறுதியில் அக்ஸர் படேல் - ஷர்துல் தாக்கூர் இணை ஓரளவு ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.