ஐபிஎல் 2022: பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் - சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 44ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 67 ரன்களும், அஸ்வின் 21 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.2 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் க் கேப்டனான சஞ்சு சாம்சன், பேட்டிங்கில் கூடுதலாக ரன் எடுக்காததே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சு சாம்சன் பேசுகையில், “பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சில ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். பனிப்பொழிவு காரணமாக பந்துவீசுவது மிக கடினமாக இருந்தது. இந்த தொடர் நடைபெறும் ஒவ்வொரு ஆடுகளமும், வேறு வேறு தன்மை கொண்டதாக உள்ளது. இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்வதே சவலானது தான், பேட்டிங்கில் இன்னும் சிறிது ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் கூட அது எங்களுக்கு உதவியாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.