ஐபிஎல் 2022 எலிமினேட்டர்: ராஜத் படித்தார் அபார சதம்; லக்னோவுக்கு 208 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ராஜத் படித்தார் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 25 ரன்களைச் சேர்த்திருந்த விராட் கோலி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல்லும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ராஜத் படித்தார் அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின்னர் களமிறங்கிய லாம்ரோர் 14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து படித்தாருடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். அதன்பின் ரவி பிஷ்னோய் வீசிய 16ஆவது ஓவரில் மூன்று சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசி என 27 ரன்களைச் சேர்த்தார் படித்தார்.
அவருடன் இணைந்த தினேஷ் கார்த்திக்கும் பவுண்டரிகளாக பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மறுமுனையில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜத் படித்தார் 49 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து மிரளவைத்தார்.
மறுமுனையில் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியில் மிரட்ட 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 208 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜத் படித்தார் 112 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 37 ரன்களையும் எடுத்தனர்.