ஐபிஎல் 2022: சதத்தை தவறவிட்ட டூ பிளெசிஸ்; லக்னோவுக்கு 182 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 31ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு சமீரா வீசிய முதல் ஓவரே பேரிடியாக அமைந்தது. தொடக்க வீரர் அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் விக்கெட் இழப்பையும் பொறுட்படுத்தாமல் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர். இதில் 23 ரன்கள் எடுத்திருந்த மேக்ஸ்வெல், ஜேசன் ஹோல்டரின் அபார கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய பிரபுதேசாய் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து இணைந்த டூ பிளெசிஸ் - ஷபாஸ் அஹ்மத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெசிஸ் இந்த சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த ஷபாஸ் அஹ்மத் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
ஆனால் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 96 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது.