ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணி இளம் வீரரைத் தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்தது - வாசிம் ஜாஃபர்!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குவதால் இந்த சீசன் மிகுந்த சுவாரஸ்யமானதாக இருக்கும்.
2 அணிகள் புதிதாக இறங்குவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்தது. மெகா ஏலத்திற்கு முன்பாக சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவரையும் தக்கவைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஷிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகிய பல சிறந்த வீரர்களை எடுத்து வலுவான அணியாக கட்டமைத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தக்கவைத்தது ஆச்சரியமாக இருப்பதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்திருக்கிறார். அண்டர் 19 அணியில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை, 2020 ஐபிஎல்லில் ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ராஜஸ்தான் அணி 2020 ஐபிஎல்லில் கொடுத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் சோபிக்காததால் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் 2021 ஐபிஎல்லில் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்தன. அவரும் அதிரடியான தொடக்கங்களை அணிக்கு அமைத்து கொடுத்தார்.
ஐபிஎல்லில் 13 போட்டிகளில் ஆடி 289 ரன்கள் அடித்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. ஆனாலும் அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்தது ஆச்சரியமாக இருப்பதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய வாசிம் ஜாஃபர், “இவ்வளவு சீக்கிரமாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி தக்கவைத்தது ஆச்சரியமாக உள்ளது. தேவ்தத் படிக்கல்லுடன் ஜெய்ஸ்வால் ஓபனிங்கில் இறங்குவார் என்று நினைக்கிறேன். ரஞ்சி தொடரின்போது ஜெய்ஸ்வால் அணியிலிருந்து நீக்கப்பட்டது, பெரிய பின்னடைவு.
ஐபிஎல் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தக்கவைக்கப்பட்ட அப்துல் சமாத் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோருக்கும் இதே தான். இவர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இன்னும் பெரிதாக சாதித்ததில்லை.
ஆனாலும் அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ள இந்த வீரர்கள் அழுத்தத்தை எப்படி கையாள்கிறார்கள் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.