ஐபிஎல் 2022: படுதோல்வி குறித்து கருத்து தெரிவித்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் 37ஆவது ஆட்டமான நேற்று லக்னோவுக்கு எதிராக மீண்டும் மும்பை அணி தோல்வியை சந்தித்தது.
5 முறை சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ், இந்த முறை தொடர்ச்சியாக 8 தோல்விகளை சந்தித்தது ரசிகர்களை மனம் கலங்க வைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். டிக்காக் (10), ஸ்டோய்னிஸ் (0), க்ருணால் பாண்ட்யா (1), தீபக் ஹூடா (10), ஆயுஸ் பதோனி (14) என ஏமாற்றினர். எனினும் மறுபுறம் தூண் போன்று நிலைத்து நின்ற கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் (103 ரன்கள்) சதமடித்து அணியை மீட்டார். இதனால் 20 ஓவர்களில் லக்னோ அணி 168 ரன்களை எடுத்தது.
விரட்டக்கூடிய இலக்கு தான் என களமிறங்கிய மும்பை அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் இஷான் கிஷான் (8), டெவால்ட் பிரேவிஸ் (3), சூர்யகுமார் (7), பொல்லார்ட் (19), டேனியல் சாம்ஸ் (3) என சிறிது பார்ட்னர்ஷிப் கொடுக்காமல் வெளியேறினர். கேப்டன் ரோகித்தே 39 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ரோஹித் கடுமையான வார்த்தைகளை கூறியுள்ளார். அதில் பேசிய அவர், “கடினமான களத்திலும் நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். பேட்டிங்கில் தான் சொதப்பிவிட்டோம். இதுபோன்ற இலக்கை துரத்தும் போது பார்ட்னர்ஷிப் அவசியம். ஆனால் மிடில் ஓவர்களில் சிலரின் பொறுப்பே இல்லாத ஷாட்கள், எங்களை தோல்விக்கு கொண்டு சென்றது. அதில் நானும் அடங்குவேன்.
மிடில் ஆர்டரில் யாரேனும் ஒருவராவது கடைசி வரை ஆட வேண்டும். ஆனால் இங்கு அது நடக்கவே இல்லை. எதிரணிகளில் அது மிகவும் பொறுப்பாக நடப்பது நமக்கு நடக்கவில்லை என்பது தான் வலிக்கிறது. முதலில் நாங்கள் செட்டில் ஆன டீம் தானா என்பது சந்தேகமாக உள்ளது. நாட்டிற்காக விளையாடும்போது, வீரர்களின் பணி வேறு. ஆனால் இங்கு அனைவரும் வேறுமாதிரியான ஆட்டத்தை காட்ட வேண்டும். அதுதான் எனக்கு கவலையாக உள்ளது. எனினும் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளை தந்துள்ளேன் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.