ஐபிஎல் 2022: இஷான் கிஷானுக்கு கடும் போட்டி நிலவும் - ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நாளையும்(பிப்ரவரி 12) நாளை மறுநாளும் (பிப்ரவரி 13) பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, குயிண்டன் டி காக் உள்ளிட்ட பெரிய வீரர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதால் இந்த ஏலம் மிக சுவாரஸ்யமானதாக இருக்கும்.
பெரிய வீரர்கள் மட்டுமல்லாது அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அண்டர் 19 வீரர்கள் சிலரும் பெரிய தொகைக்கு விலைபோவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைவதால் இளம் வீரர்களுக்கான தேவை இருப்பதால், இளம் வீரர்கள் மீது அதிக ஆர்வம் காட்டப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில், இந்த சீசனுக்கான ஏலத்தில் இஷான் கிஷானை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நடக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஏலத்தில் பல அணிகள் இஷான் கிஷானைத் தேர்வு செய்ய போட்டி போடும் என்பதால் கடினமாக இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கண்டிப்பாக அவரை குறிவைக்கும். நான் இஷான் கிஷானின் ரசிகன். வரும் காலத்தில் மிகப்பெரிய வீரராக வருவார். அவரைப் போன்ற ஒரு வீரர் எந்த அணிக்கு சென்றாலும் அவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்க வேண்டும். அவர் வயதாகும்போது, பொறுப்புகளுடன், அவர் இன்னும் பெரியவராக மாறுவார்” என்று தெரிவித்துள்ளார்.