ENG vs IND: தொடரிலிருந்து விலகும் ரிஷப் பந்த்; இஷான் கிஷானுக்கு அழைப்பு?
Rishabh Pant injury: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பிய நிலையில் தற்சமயம் தொடரில் இருந்து விலகும் சூழல் உருவாகியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான ரிஷப் பந்த் காயத்தை சந்தித்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்படி இன்னிங்ஸின் 68ஆவது ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசிய நிலையில் ஓவரின் நான்காவது பந்தை ரிஷப் பந்த் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்தார்.
ஆனால் அவர் அந்த பந்தை சரியாக கணிக்கத்தவறியதன் காரணமாக அது நேரடியாக அவரது ஷூவைத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்து ரிஷப் பந்த் வலியால் அலறினார். பின்னர் அணி மருத்துவர்கள் களத்திற்குள் வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். இருப்பினும் அவரால் நிற்கக்கூட முடியாததன் காரணத்தால் அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதனால் ரிஷப் பந்த் ஆறு வார காலம் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் ரிஷப் பந்த் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதுடன், கடைசி டெஸ்ட் போட்டியிலும் விளையாடமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது இந்திய அணிக்கு பெரும்பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
இதன் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இஷான் கிஷான் தற்சமயம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவதன் காரணமாக அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுகிறது.