இந்த வெற்றி கொஞ்சம் தாமதமாக கிடைத்துவிட்டது - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியி டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷான் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களையும் சேர்த்த நிலையில், மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பினை வழங்கினர். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களைச் சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் ரொமாரியோ ஷெஃபர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், விராட் கோலி 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இப்போட்டியில் வெற்றிபெற்றது குறித்து பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், “இதுபோன்ற வெற்றிகள் இந்த சீசனில் எங்களுக்கு கொஞ்சம் தாமதமாக கிடைத்துவிட்டது. ஆனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இப்போது நிதிஷ் மீண்டும் பந்து வீசத் தொடங்கியிருப்பது, எங்களின் பந்துவீச்சு தேர்வுகளை அதிகரித்துள்ளது. மேலும் நிதீஷை பயன்படுத்தும் படி அபிஷேக் எப்போதும் என்னிடம் கூறுவார்.
Also Read: LIVE Cricket Score
இந்த போட்டியில் இஷான் கிஷான் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதலில் நாங்கள் இந்த விக்கெட்டில் 170 ரன்கள் தான் கிடைக்கும் என்று தவறாகப் புரிந்துகொண்டோம். பின்னர் அனைத்து பேட்டர்களும் இது ஒரு நல்ல விக்கெட் என்றும் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் கூறினர். மேலும் பந்துவீச்சில் இஷான் மலிங்கா எங்களுக்கு சிறந்த வீரராக இருந்துள்ளார். இந்த சீசனில் அவர் ஒரு சிறந்த தேர்வாக இருந்துள்ளார்” என்று கூறிவுள்ளார்.