ஐபிஎல் 2022: முதல் போட்டிக்கு தயாராக இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Sun, Mar 20 2022 14:25 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இம்மாதம் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 12.25 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார் ஸ்ரேயஸ் ஐயர். அவரே கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐபிஎல் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வரும் 26ஆம் தேதி விளையாடுகின்றன.

இதுகுறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் "விக்கெட் விழாதவாறு பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடுபவராக நினைத்துக்கொள்ள முடியாது. சூழலுக்கு ஏற்ப நான் அதிரடி ஆட்டக்காரராக இருக்கலாம், மற்றொரு வீரர் விக்கெட் விழாதவாறு பார்த்துக்கொண்டு விளையாடலாம். நிலைமைக்கு ஏற்ப சூழலும் பொறுப்பும் வேறுபடும். விக்கெட் விழாதவாறு பார்த்துக்கொண்டு விளையாட ஒரு வீரரை மட்டுமே நம்ப முடியாது.

அணியிலுள்ள அனைத்து வீரர்களும் பொறுப்பேற்றுக்கொண்டு, மற்ற வீரர்களை சார்ந்து இல்லாமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும். தனிப்பட்ட முறையில் எனக்கு 3ஆவது நிலை வீரராகக் களமிறங்குவது பிடிக்கும். நீண்ட நாள்களாக அந்த நிலையில் விளையாடி வருகிறேன். ஆனால், அணி என்னை எங்கு களமிறங்க வேண்டும் என நினைக்கிறதோ அதற்கேற்ப நான் மாறிக்கொள்வேன். 

கொல்கத்தா அணி எப்போதுமே ஆக்ரோஷமான பயத்தைக் காட்டிராத அணியாகத்தான் இருந்துள்ளது. முதல் பந்திலிருந்து அடித்து விளையாடி எதிரணியை பின்னடைவைச் சந்திக்கச் செய்யும். அதற்கான மனநிலை இருக்க வேண்டும். எப்போது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும், அதே மனநிலையில்தான் நான் செல்வேன். கேப்டனாக வழிநடத்தும்போது அணி வீரர்களிடமிருந்தும் அதைத்தான் நான் விரும்புவேன். 

எது செய்தாலும், அதை அணிக்காக செய்ய வேண்டும். நம்மை முன்னிலைப்படுத்தக் கூடாது. ஒரு கேப்டனாக அந்த மனநிலையில் கவனம் செலுத்தவே நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை