ஐபிஎல் 2022: ரஸ்ஸலின் இறுதிநேர அதிரடி; ஹைதராபாத்திற்கு 176 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடராஜன் வீசிய முதல் பந்திலேயே வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களுக்கு க்ளீன் போல்டாகினார். அதன்பின் களமிறங்கிய சுனில் நரைனும் 6 ரன்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் - நிதிஷ் ராண இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்களுக்கு உம்ரான் மாலிக்கின் அபார யார்க்கரில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களுக்கு மாலிக்கிடமே விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதீஷ் ராணா 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருடன் இணைந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் வழக்கம் போல் தனது அதிரடியில் மிரட்டினார்.
அதன்பின் 54 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ராணாவும் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பாட் கம்மின்ஸும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் 45 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.