ஐபிஎல் 2022: கேஎல் ராகுல் அபார சதம்; மும்பைக்கு 200 இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது..
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் ராகுல் - குயிண்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் 24 ரன்கள் எடுத்திருந்த டி காக் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ராகுல் - மனீஷ் பாண்டே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது . தொடர்ந்து அபாரமாக விளையாடிவந்த கேஎல் ராகுல் அரைசதம் கடந்து அசத்தினார்.
மறுமுனையில் அரைசதம் கடப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட மனீஷ் பாண்டே 38 ரன்கள் சேர்த்த நிலையில் முருகன் அஸ்வினிடம் க்ளீன் போல்டாகினார். அவரைத் தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், முதல் பந்திலேயே சிக்சரை விளாசினாலும், 10 ரன்களோடு நடையைக் கட்டினார்.
இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் மும்பை அணிக்கெதிரான இரண்டாவது சதமாகவும் இது அமைந்தது.
அவருடன் இணைந்த தீபக் ஹூடாவும் தனது பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 103 ரன்களைச் சேர்த்திருந்தார்.