ஐபிஎல் 2022: கோலி, படித்தர் அரைசதம்; குஜராத்துக்கு 171 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 43ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
பின்னர் நடப்பு சீசனில் ரன் குவிக்க தடுமாறிவரும் விராட் கோலி இன்றைய போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்த ராஜத் படித்தரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடக்க, ராஜத் படித்தரும் அரைசதம் விளாசினார். இதன்மூலம் இருவரது ஃபார்ட்னர்ஷ்ப்பும் 100 ரன்களை எட்டியது.
பின்னர் 52 ரன்களில் ராஜத் படித்தர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து விராட் கோலியும் 58 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் க்ளென் மேக்ஸ்வெல் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் இந்த சீசனில் அபாரமான ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தது ஆர்சிபி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல்லும் 33 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களைக் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் பிரதீப் சங்வான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.