ஐபிஎல் 2022: ரிங்கு சிங் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா!
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் கேகேஆரும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 2 ரன்னில் ஆட்டமிழக்க, தட்டுத்தடுமாறி பேட்டிங் ஆடிய பட்லர் 25 பந்தில்22 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். கருண் நாயர் 13 ரன்னிலும், ரியான் பராக், 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த சாம்சன் 54 ரன்னில ஆட்டமிழந்தார்.
டெத் ஓவர்களில் ஷிம்ரான் ஹெட்மயர் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினார். 13 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 27ரன்கள் அடித்து 20 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 152 ரன்கள் அடிக்க உதவினார் ஹெட்மயர். 153 ரன்கள் என்ற சவாலான இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபிஞ்ச், பாபா இந்திரஜித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - நிதீஷ் ராணா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களில் விக்கெட்டை இழந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதன்பின் ராணாவுடன் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் 42 ரன்களையும், நிதிஷ் ராணா 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.