ஐபிஎல் 2022: உலகக்கோப்பை பயிற்சியாளருக்கு வலைவிரிக்கும் லக்னோ!
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல்லில் இதுவரை 8 அணிகள் விளையாடிவந்த நிலையில் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் களம் காண்கின்றன. லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இறங்குகின்றன. எனவே அடுத்த சீசனிலிருந்து ஐபிஎல்லில் 10 அணிகள் ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.
அடுத்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக ஆடுகின்றன. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7,090 கோடிக்கு வாங்கியது. அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டள் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.
அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவிருப்பதால், ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். அதேபோல, புதிதாக இணைந்துள்ள அணிகள், ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை தேர்வு செய்துகொள்ளலாம்.
புதிய அணிகள் பயிற்சியாளர்களை தேடிவருகின்றன. அந்தவகையில் லக்னோ அணி, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேனும், 2011இல் ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டனை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read: T20 World Cup 2021
அதேபோல பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு இந்தியாவின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஆஷிஷ் நெஹ்ராவை அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரி கிறிஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகிய இருவருமே 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் அங்கம் வகித்தவர்கள். கிறிஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா இருவரும் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவிலும் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.