ஐபிஎல் 2022: ஆவேஷ் கான், ஹோல்டர் பந்துவீச்சில் வீழ்ந்தது ஹைதராபாத்!

Updated: Mon, Apr 04 2022 23:22 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், வாஷிங்டன் சுந்தர் வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரின் அடுத்த ஓவரில் எவின் லீவிஸும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.  

அதன்பின் 5ஆவது ஓவரை ரொமாரியோ ஷெஃபெர்டு வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்த மனீஷ் பாண்டே, அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, 27 ரன்களுக்கே லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பவர்ப்ளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி.

பின்னர் கேஎல் ராகுலும் தீபக் ஹூடாவும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 4வது விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தீபக் ஹூடா 51 ரன்னில் ஆட்டமிழந்தார். 

அபாரமாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ராகுல் 50  பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஆயுஷ் பதோனி 12 பந்தில் 19 ரன்களும்,  ஹோல்டர் 3 பந்தில் 8 ரன்களும் அடித்து முடிக்க, 20 ஓவரில் 169 ரன்கள் அடித்த லக்னோ அணி, 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி - ஐடன் மார்க்ரம் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 12 ரன்களில் மார்க்ரம் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திரிபாதி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் - வாஷிங்டன் சுந்தர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் 18ஆவது ஓவரை வீசிய ஆவேஷ் கான், நிக்கோலஸ் பூரன் மற்றும் அப்துல் சமத் ஆகியோரை அடுத்தடுத்து பந்துகளில் வெளியேற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இறுதியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற 16 தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை ஜேசன் ஹோல்டர் வீசிய முதல் பந்திலேயே வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்க, போட்டி லக்னோ அணி பக்கம் திரும்பியது.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது. லக்னோ அணி தரப்பில் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை