ஐபிஎல் 2022: பதினோறு ஆண்டுகளுக்கு பிறகு திரும்பும் அதிரடி வீரர்!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி துவங்கி மே 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள் துவங்க இன்னும் 4 நாட்களே இருப்பதால், அனைத்து அணிகளும் இறுதிக் கட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் 2011-க்குப் பிறகு, அதாவது 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அதிரடி வீரர், ஐபிஎலுக்கு திரும்பி வந்துள்ள விஷயம், பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அவர் வேறு யாருமில்லை ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தான்.
இவர் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் இடம்பெற்று 3 போட்டிகளில் களமிறங்கி 22 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இப்படி மூன்று வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதால், அடுத்து அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு, சிகிச்சைக்காக நீண்ட கால ஓய்வுக்கு சென்றார்.
அதன்பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய அவருக்கு, தற்போதுதான் டி20 அணியில் ரெகுலராக இடம் கிடைக்கிறது. அனுபவ வீரர் என்பதாலும், ஆஸ்திரேலிய டி20 அணிக்கு சரியான விக்கெட் கீப்பர் கிடைக்காததாலும்தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை பயன்படுத்தி அபாரமாக விளையாடி, தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில், அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி 2.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரீடியை, பல முன்னணி பேட்ஸ்மேன்களும்கூட எதிர்கொள்ள சிரமப்பட்டார்கள். இருப்பினும், அரையிறுதிப் போட்டியில் ஷாஹீன் அப்ரீதி, மேத்யூ வேட் சிறப்பாக எதிர்கொண்டு தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை அடித்து, அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போதே, மேத்யூ வேட் உலக அளவில் முழு கவனம் பெற்றார். இதனால், ஐபிஎல் மெகா ஏலத்தில், அதிக தொகைக்கு ஏலம் போவார் எனக் கருதப்பட்ட நிலையில், தற்போது குஜராத் டைடன்ஸ் அணி 2.40 கோடிக்கு வாங்கியுள்ளது.
மேத்யூ வேட் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎலில் பங்கேற்க உள்ளதால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போது வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.