ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகியது குறித்து மனம் திறந்த மிட்செல் ஸ்டார்க்!

Updated: Mon, Jan 31 2022 14:37 IST
IPL 2022: Mitchell Starc reveals he pulled out of auction at the last minute (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி இதுவரை இரண்டு ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடியுள்ள அவர் 2014 மற்றும் 15 ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடி 27 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

உலக அளவில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் பெரிதாக விளையாடியதில்லை. இந்நிலையில் இந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது இந்த மெகா ஏலத்தில் இருந்து ஸ்டார்க் விலகியுள்ளார்.
 
இறுதியாக 2018 ஆம் ஆண்டு 9.4 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் காயம் காரணமாக அந்த தொடரில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் 32 வயதான மிட்செல் ஸ்டார்க் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து பேசியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் தான். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நான் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பவில்லை ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரில் நான் கலந்து கொள்ளும் பட்சத்தில் என்னால் 22 வாரங்கள் பயோ பபுள் வளையத்தில் இருக்க முடியாது.

இதன் காரணமாகவே நான் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன். என்னுடைய இந்த விலகலுக்கு வேறு எந்தக் காரணமும் கிடையாது. மேலும் பயோ பபுள் வளையத்தில் இருந்தால் மனதளவில் தன்னுடைய நிலை பாதிக்கப்படும் என்றும் அதன் காரணமாகவே தான் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறோம்.

அதோடு எதிர்வரும் டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் அதற்கு முந்தைய பயிற்சிகளை நான் இந்த சில மாதங்களில் எடுக்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை