ஐபிஎல் 2022: டிம் டேவிட்டின் இறுதிநேர அதிரடி; குஜராத்திற்கு 178 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தது.
பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களோடு விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் அசத்தலாக விளையாடிய இஷான் கிஷானும் 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கீரன் பொல்லார்டும் வழக்கம் போல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து ஸ்கோரை உயர்த்திய திலக் வர்மா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகினார்.
ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் ஸ்கோரை உயர்த்த உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களைச் சேர்த்தது.இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 44 ரன்களைச் சேர்த்தார்.