ஐபிஎல் 2022 குவாலிஃபையர்: மீண்டும் அசத்திய படித்தார்; ராஜஸ்தானுக்கு 158 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். மேலும் இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இதையடுத்து களமிரங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இதில் ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி சிக்சர் விளாசி தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.
இதனால் இன்றைய போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரசித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரில் 7 ரன்களோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் டூ பிளெசிஸுடன் ஜோடி சேர்ந்த ராஜத் படித்தார் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தடுத்துடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார். இந்த இணை இரண்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 50 ரன்களையும் கடந்தது.
இதையடுத்து 25 ரன்களில் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ராஜத் படித்தார் அரைசதம் கடந்தார். அவருக்கு உறுதுணையாக கிளென் மேக்ஸ்வெல்லும் சில பவுண்டரிகளை விளாசி 24 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ராஜத் படித்தாரும் 58 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லாம்ரோர், நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக், வநிந்து ஹசரங்கா ஆகியோரும் சோபிக்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்யவுள்ளது.