ஐபிஎல் 2022: ராகுல், ஹூடா அரைசதம்; டெல்லிக்கு 196 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - குயிண்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டி காக் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. பின்னர் 52 ரன்கள் எடுத்திருந்த தீபக் ஹூடா, ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு திரும்பினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிக்சர் விளாச முயன்று விக்கெட்டை இழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.