ஐபிஎல் 2022: ஒற்றையாளாய் போராடிய மொயின் அலி; ராஜஸ்தானுக்கு 151 டார்கெட்!
ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. இந்த சீசனில் இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் போட்டி. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே வெறும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 2ஆவது ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடிக்கப்பட்டது. 3ஆம் வரிசையில் இறங்கிய மொயின் அலி, 4ஆவது ஓவரிலிருந்து அடித்து ஆட ஆரம்பித்தார்.
பிரசித் கிருஷ்ணா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய மொயின் அலி, அஷ்வின் வீசிய 5ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரையும், டிரெண்ட் போல்ட் வீசிய பவர்ப்ளேயின் கடைசி ஓவரான 6ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளையும் விளாசினார்.
19 பந்தில் அரைசதம் அடித்து, சிஎஸ்கே அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ரெய்னா 16 பந்தில் அரைசதம் அடித்து முதலிடத்தில் உள்ளார். மொயின் அலியின் அதிரடியால் பவர்ப்ளேயில் 75 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.
ஆனால் அதன் பின் டேவன் கான்வே 16 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஜெகதீசன், ராயூடு ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் சிஎஸ்கேவின் ரன் வேகம் படிப்படியாக குறைந்தது.
அதன்பின் மொயினுடன் இணைந்து விளையாடிய கேப்டன் தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பைத் தடுத்தார். அதன்பின் 26 ரன்களில் தோனி ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலி 93 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை மட்டுமே சேர்த்தது.