ஐபிஎல் 2022: சாம்சன் அரைசதம்; ஹைதரபாத்திற்கு 211 இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கத்திலேயே தடுமாறியது.
அதிலும் புவனேஷ்வர் குமார் விசிய முதல் ஓவரிலேயே ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்தார். ஆனால் அது நோ பாலாக அமைய பட்லர் தப்பித்தார்.
அதன்பின் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த இருவரும் பவர்பிளேயில் 58 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் 20 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். பின் பட்லருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார்.
இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் தொடக்கத்தில் நிதனாமக விளையாடி, பின் அதிரடியாக ஆடத்தொடங்கினார்.
அவருடன் இணைந்து சஞ்சு சாம்சனும் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். பின் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் படிக்கல் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த சாம்சன் அரைசதம் கடந்தார்.
அதன்பின் 55 ரன்களில் சாம்சனும் விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 பந்துகளில் 32 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.