ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் இணையும் ஏபிடி வில்லியர்ஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இம்மாதம் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதிலும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடிவீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஐபிஎல் உள்பட அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிகொடுத்தார்.
இதன் காரணமாக அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு,டெல்லி டேர்டெவில்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக இதுவரை 184 போட்டிகளில் விளையாடி 5162 ரன்களைக் குவித்துள்ளார். இதில் மூன்று சதம், 40 அரைசதம், 251 சிக்சர்களும் அடங்கும்.
இவரது ஓய்வு முடிவானது ஆர்சிபி அணிக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. அதன்காரணமாக அவரை அணியின் பயிற்சியாளர்கள் வரிசையில் சேர்க்கவும் ஆர்சிபி அணி பெரும் முயற்சிகளை எடுத்தது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஏபிடி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலையடுத்து ஆர்சிபியில் மீண்டும் ஏபிடியை பார்க்கவுள்ள உற்சாகத்தில் ரசிகர்கள் திகைத்துள்ளனர்.